நீக்கிலஸ் றீற்றா
பிறப்பு 1947.06.18
இறப்பு 2021.06.19
‘வாழும்போது வாழ்வோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றிப் போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்’
நீக்கிலான் சுவானி, சூசை மரியம்மா அவர்களின் மகளாக உதித்த நீக்கிலஸ் றீற்றா அவர்கள், நெடுந்தீவு றோ.க. பெண்கள் பாடசாலையில் தனது ஆரம்ப, உயர்நிலைக் கல்வியைக் கற்று, சிறுவயதில் ஆலயத்துடன் கொண்ட ஈடுபாடு காரணமாக பியானோ கலைஞராக தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டார். 25 வருடங்களுக்கும் அதிகமாக புனித யுவானியார் ஆலயம் உட்பட நெடுந்தீவின் பல ஆலயங்களுக்கும் பாடகர் குழுவை நெறிப்படுத்தி தனது பணியை மனத்திருப்தியுடன் செய்து வந்துள்ளார்.
நெடுந்தீவு மக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த வேளை, போதிய கலைஞர்கள் இல்லாத நிலையில் நெடுந்தீவு ஆலயங்கள் பலவற்றையும் தனது இசையால் நிரப்பி வந்துள்ளார். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள பனித லூர்து அன்னையின் வருடாந்த திருப்பலி நாட்களில் மாணவர்களுடன் இணைந்து ஆலய வழிபாட்டையும் பாடல்களையும் ஒழுங்குபடுத்தி திருப்திகரமாக தனது பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வந்தள்ளார். இவரது கலை ஆர்வத்தைப் மதித்து நெடுந்தீவு பிரதேச செயலகம் தமது கலாசார விழாவில் உரிய கௌரவிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு திருப்பாலத்துவ சபையின் இயக்குநராகவும், சிசிலியம்மாள் பாடகர் குழாமின் ஒருங்கிணைப்பாளராகவும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மறையாசிரியராகவும், இரண்டு தடவைகள் புனித யுவானியார் ஆலய பொருளாளராகவும் தனது இறை பணியை செவ்வவே மேற்கொண்டார்.
தனது அன்புக் கணவனை கொடியவர்களிடம் பறிகொடுத்து, பிள்ளைகள், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இவர், கடந்த மூன்று நாட்கள் புனித யுவானியார் ஆலய நவநாட் திருப்பலியில் தனது இறுதி இசையை இறைவனுக்கு அர்ப்பணித்து 2021.06.19 இன்று இறைவனடி சேர்ந்தார். இவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
தகவல்: ஆசிரியர் அ.ரொனிராஐன் – நெடுந்தீவு