தோழா!
கொஞ்சம் கொடு காதை!
போதை தரும் தீதை!
இதுவல்ல உன்னுடைய பாதை!
குடித்துப்பார்!
உனது விழிகளின்
வெண்ணிறத்தில் இரத்தச்
சிவப்பு இடம் பெயரும்!
அழகான புன்னகையை
உற்பத்தி செய்யும் உன் உதடுகள்
கோணல் மாணலாகி கோரமாகும்
ஆற்றொழுக்காய்ப் பேசும் நீ!
திக்குவாய்க் காரணப் போல் வார்த்தைகளைக்
கொலை செய்து
உளறிக்கொட்டுவாய்!
தூசன வார்த்தைகள்
போதை தேசத்தின்
தேசிய மொழிகளாகும்
சாராயம் அந்த தேசத்தின்
தேசிய பானமாகும்
உன்னைத் தாங்கும் சக்தி
உன் – கால்களுக்கு இராது!
தள்ளாடி நடப்பாய்…
ஒரு காகித ஓடம் போல…!
காதலில் தோல்வி என்று
தாடி ஏந்துகிறாய்…
தப்பில்லை!
மது போதை ஏந்துவதைத் தான்
சரியில்லை என்கிறேன்.
இந்த போதையால்
எத்தனை பேதைகளின்
வாழ்வு வாதை கண்டிருக்கிறது!
கோதையின் தாலியைக்
கட்டி விட்டு
நம்மில் எத்தனை பேர் இன்றும்
போதையுடன் குடும்பம் நடாத்துகிறார்கள்!
போதை வெட்கத்தை விரட்டியடிக்கும்
நீ நிர்வாண ஆடை தரிப்பாய்!
விளையாட்டாய் பழகிய
போதைப் பழக்கம்
வாழ்வின் எல்லை வரை
உன்னோடும் உன் உயிரோடும்
விளையாடிக்கொண்டிருக்கும்!
குடித்துப் பார்!
ஒரு ஆலமரமாய்
நிமிர்ந்து நின்ற நீ சிறிய நாணலைப்போல்
கூனிக் குறிகிப் போவாய்!
சிவந்த உதடுகளில்
நிரந்தரமாய் படியும் போதையின் கறுப்பு முத்தம்!
ஆச்சர்யக் குறியாய் எல்லோரையும் அசத்திய நீ…
ஒரு கேள்விக் குறியாகி
கேலிச் சித்திர மாவாய்….!
கஞ்சாவை அபினை உன் உதடு– காதலித்தல் தவறு!
நெஞ்சாற நீ உன் உடம்பில்
நஞ்சினை ஏற்றிக் கொள்கிறாய்.!
படிப்படியாய் தூளை
நீ பாவித்து வருகிறாய்!
ஒருநாள் பொடிப்பொடியாய்
நீ பொசுங்கிப்போவாய்!
பீடி சிகரட்டை பிரியமாய் ஊதுகிறாய்!
ஒருநாள் நாடி தளர்ந்து
நீ நலிந்து போவாய்!
அழகான குடிகள் அணிவகுத்திருக்க
எதற்காகத் தேர்ந்தெடுத்தாய்
இந்த அழிவு தரும் குடியை….?
நெடுந்தீவு – சதீஸ்