வரலாற்றுச் சின்னங்களுக்கு இன்று உருவங்கள் மாற்றப்பட்டு வருகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரணவாயில் திறப்புவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது முக்கியமானதும் அவசியமானதுமான பணியாகவுள்ளது. சமகால வரலாற்று நிகழ்வுகளை அது நிகழ்ந்த நாட்டிலே பேணிக்கொள்ள முடியாத நிலையில், அயல் நாட்டிலும் வெளிநாட்டிலும் நினைவகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றாம்.
இன்றுள்ள சூழலில் வரலாற்றுச் சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே எமது சின்னங்களை பாதுகாத்தால்தான் எதிர்காலச் சந்ததிகளுக்கு அவற்றைக் கடத்த முடியும்.
அண்மையில் காலிக் கோட்டையில் இருக்கும் அடையாளச் சின்னங்களை பார்வையிட்டேன் அங்கு நயினாதீவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட கல்வெட்டொன்று காணப்பட்டது. அப்போது நான் நாம் அதை பாதுகாக்கத் தவறிவிட்டோம் என எண்ணினேன்.
வீதியோரங்களில் காணப்படும் கட்டடங்கள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் போன்றன அபிவிருத்திகளின் போது அகற்றப்பட்டுவிட்டன. பல அகற்றப்படத் தயாராகவுள்ளன. வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் எமது வரலாறு எமது சந்ததிக்கு எந்தளவு பொறிக்கப்படுகின்றது என்பது மிகமிக முக்கியமானது.