சரஸ்வதி ஜீவராஜ் நூலையும் தையல் ஊசியையும் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை மட்டுமன்றி பெண்கள் பலருடைய வாழ்க்கையையும் மாற்றியவர், போர்க்காலத்தில் பல இழப்புக்கள், இடப்பெயர்வுகள் என்பவற்றால் எல்லோரையும் போலவே துன்பத்தின் இறுதி எல்லைவரை சென்றவர் சரஸ்வதி. ஆனால், துணிச்சல், தன்னம்பிக்கை என்பவற்றின் துணையால் தன்னுடைய வாழ்கையையே மாற்றியவர். பலருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். இப்போதும் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
இதன் உச்சமாக “சிகரம் தொட்ட தமிழ்ப் பெண்கள்” என்ற விருதையும் பெற்று வெற்றி நடைபோடுகின்றார் சரஸ்வதி. வன்னியில் இன்று முன்னணி ஆரிக்கலை நிபுணராகவும், ஆரிக்கலை பயிற்றுனராகவும். வடிவமைப்பாளராகவும், சுயதொழில் முயற்சியாளராகவும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களோடு இனணந்து செயற்பட்டு வருகின்றார் சரஸ்வதி ஜீவராஜ் “தமிழர் பொருண்மியம்” சார்பில் அவரைச் சந்தித்த போது தன்னுடைய வெற்றிக் கதையை அவர் சுருக்கமாகச் சொன்னார்.
சரஸ்வதி ஜீவராஜ் கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்டவர். தாய், தந்தையர் நெடுந்தீவை சேர்ந்தவர்கள். கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். இலங்கை செஞ்சிலுவைச் iggle community mobilizer ஆக பணிபுரிந்தவர். தொடர்ந்தும் பல அரசசார்பற்ற நிறுவனங்களில் பல பதவிகளில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றியவர். இதன்மூலமாக தான்பெற்றுக்கொண்ட அனுபவங்கள். அறிமுகங்கள் தன்னை ஒரு சுய தொழில் முயற்சியாளராக வளர்த்தது என்று கூறுகின்றார் சரஸ்வதி. இனி அவரது நேர்காணலுக்குள் செல்வோம்.
கேள்வி:- போரினால் பெரும் நெருக்கடி களையும் இழப்புக்களையும் சந்தித்த நீங்கள். உங்களுடைய வாழ்வாதாரத்துக்கு தையற்கலையைத் தேர்தெடுக்க காரணம் என்ன?
பதில்:- மேலதிக வருமானத்திற்காக கைப்பை வடிவமைப்பை செய்யவேண்டும் என்ற எனது முயற்சிக்கு கிளிநொச்சியில் பல கடைகளில் எனக்கு ஆதரவு கிடைத்தது. தையல் கலையில் இருந்த ஆர்வம் காலத்தின் தேவைக்கேற்ப ஆரிக்கலையை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்திய ஆரிக்கலை பாடத்தை இலங்கையிலும் இந்தியாவிலும் முறையாகக் கற்றுகொண்டேன்.
அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு எனது சகோதரன் நடாத்திவந்த College of vanni நிறுவனத்தினைப் பொறுப்பேற்று பல சுயதொழில் முயற்சியாளர்கள் பெண் தலைமைத்துவம் தாங்கும் குடும்பத்தினர் வெளிநாட்டு தொழில் முயற்சிக்காக செல்லும் பெண்கள் ஆண்கள் எனப் பலருக்கும் பயிற்சியளித்தேன்.
மன்னார், நெடுந்தீவு, அம்பாள்குளம், பரந்தன், கண்டாவளை கிளிநகர் ஆனந்தபுரம், ஸ்கந்தபுரம் எனப்பல இடங்களில் பல தொழில் முயற்சியாளர்ளை தனிப்பட்ட மற்றும் தனியார் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எனது வெற்றிப் பயணம் தொடர்கிறது. அத்தோடு 2014 ஆம் ஆண்டில் இருந்து ஜெர்மன் நாட்டிற்கு செல்வோருக்கான deutsch A1 கல்வியினை எனது கல்வி நிலையத்தின் ஊடாகக் கற்பித்து வருகின்றேன்.
கேள்வி -இதனை நீங்கள் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய துறையாக எவ்வாறு வளர்த்தெடுத்தீர்கள்?
பதில் நான் கூகுள் வரைபடத்தில் என்னுடைய கொலிஜ் ஒப் வன்னியை பதிவு செய்திருக்கின்றேன். அதனைவிட ஆரிக்கலை – கிளிநொச்சி என்று கூகுளில் கொடுத்தாலும் எமது நிறுவனத்தைத்தான் காட்டும். அதன் மூலமாக கண்டறிந்துதான் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து விடுமுறைக்காக ஊருக்கு வரும் சிலர் எமது நிறுவனத்துக்கு வந்து படித் தார்கள்.
எம்மிடம் படிப்பவர்கள் அதனை முடிக்கும் போது பிளவுஸ் ஒன்றைச் செய்து காட்டவேண்டிய தேவை இருக்கின்றது. அதேவேளையில், அவர்களுக்கான ஓடர்களையும் நானே எடுத்துக்கொடுக்கிறேன். இதன் மூலமாக அவர்களுக்குத் தொடர்ச்சியாக ஓடர்கள் வந்துகொண்டிருக்கும். அதேவேளையில் நான்கு ஐந்து மாணவர்கள் என்னிடம் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். அது மாறிமாறி சுழற்சி அடிப்படையில் இருக்கும். தொடர்ச்சியாக ஒரே ஆட்கள் வேலை செய்ய மாட்டார்கள்.
என்னிடம் பயிற்சிக்கு வருபவர்களுக்கு அதனை சிறப்பாக செய்து முடிப்பதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்து, அவர்க ளுக்கு அதில் ஆர்வத்தை ஏற்படுத்தி வழிப்படுத்துவதால் அவர்கள் தொடர்ச்சியாக அதனை தமது தொழிலாக செய்யக்கூடியதாக இருக்கின்றது.
கேள்வி:- உங்களுடைய நிறுவனத்தில் எவ்வறான பயிற்சிகளை நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள்? இதில் எவ்வளவு பேர் பயின்றுள்ளார்கள்?
பதில்:- எனது கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரையில் குறுங்காலப் பயிற்சி நெறி. சான்றிதழ் கற்கை நெறி, தொழில் சார்பயிற்சி நெறி என காலத்தின் தேவைக் கேற்ப பலவிதமான பயிற்சி நெறிகளை நடத்திவருகின்றேன். குறுங்கால பயிற்சி நெறியாக மெழுகுவர்த்தி செய்தல், கைப்பை வடிவமைப்பு, பொம்மை உற்பத்தி, கேக் அலங்காரம் என்பவற்றைச் செய்கின்றேன். சான்றிதழ் கற்கை நெறியாக ஆரிக் கலையைப் பயிற்றுவிக்கிறேன். முந்நுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிப்பட்ட மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இதனைக் கற்று வெளி யேறியுள்ளார்கள்.
இதனைவிட ஜேர்மன் தூதரகத்தினால் ஜேர்மன் பயணிப்பவர்களுக்காக நடத்தப்படும் ஏ-1 பரீட்சைக்கு இலகுவழித் தயார் படுத்தலை முன்னெடுக்கின்றேன். ஆரம்ப அறிவுடன் பரீட்சைக்குச் செல்லும் வரையிலான தயார்படுத்தல் வகுப்புக்கள் மிக நேர்த்தியாக நடத்தப்படுகின்றன. இதுவரை 34 க்குக்கும் அதிகமான மாணவர்கள் இங்கு கல்விகற்று ஜேர்மனிக்கு சென்றுள்ளார்கள்.
கேள்ளி:- உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு அரசாங்கம் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்கள் எந்தளவுக்கு உதவியிருக்கின்றன? அவை எந்தளவுக்கு உங்களுக்குப் பயனளித்துள்ளன?
பதில்:- அரசாங்க, அரசசார்பற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பயிற்சி நெறிக்கான வளவாளராக என்னைத் தெரிவு செய்து, என்னை பல மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தி என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். எனது ஆரம்பகால வளச்சியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்னை தெரிவு செய்து, புதிய தையல் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கு உதவி செய்தது. அத்துடன் நின்றுவிடாது. அது தமது இணையத் தளத்தில் ‘ICRC Needel Sri Lanka’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டது. அதன்மூலமாக பல ஓடர்கள் என்னைத் தேடிவந்தன. அவை எனது வளர்ச்சிக்கு துணையாக அமைந்தன.
கேள்வி:- எவ்வாறான பொருட்களை நீங்கள் அதிகளவுக்கு உற்பத்தி செய்கின்றீர்கள்? அவற்றுக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கின்றது?
பதில்:- சாறி சட்டை வடிவமைப்பு, சட்டை வடிவமைப்பு என்பவற்றுடன் கற்பித்தலையும் மேற்கொள்கின்றேன். எனது மாவட்டத்தைப் பொறுத்த வரையில் எனக்குத் தனித்துவமான ஒரு இடமி ருப்பதாகவே கருதுகின்றேன். வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் வருபவர்களும் என்னிடம் ஆரிக் கலையைப் பயில்கின்றார்கள். ஒன்லைன் மூலமாகவும் இதற்கான பயிற்சிகளை வழங்கிவரு கின்றேன். ஒப்பீட்டடிப்படையில் என்னிடம் ஆரிக் கலையினைக் கற்பதற்காகவே அதிகமானவர்கள் வருகின்றார்கள். என்னிடம் கற்கும் மாணவர்களே புதிய மாணவர்களை அதிகளவுக்கு அறிமுகம் செய்கின்றார்கள்.
கேள்வி:- புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உங்களுடைய உற்பத்திப் பொருட்களை எந்தளவுக்கு விரும்பிக்கொள்வனவு செய்கின்றார்கள்?
பதில்:- ஆரிக்கலை வகுப்புக்களை புலம்பெயர்ந்த மக்கள் ஒன்லைன் மூலமாகவும் படிக்கின்றார்கள். அத்துடன் அவர்கள் தாயகத்துக்கு வருகை தரும் போது நேரடியாக வந்தும் படித்திருக்கின்றார்கள். அதனைவிட எமது நிறுவனத்தின் சேவைகள் குறித்து அறிந்திருக்கும் புலம்பெயர்ந்த எம்மவர்கள் பலர் அங்கிருந்தே ஓடர்களையும் தருகின்றார்கள்.
கேள்வி:- சிகரம் தொட்ட தமிழ்ப் பெண்கள்” என்ற விருது அண்மையில் உங்களுக்கு கிடைத்தது. எதற்காக இந்த விருது உங்களுக்கு கிடைத்தது? யார் வழங்கியிருந்தார்கள்?
பதில்:- சிகரம் தொட்ட தமிழ்ப் பெண்கள் என்ற விருது இலங்கை அழகுக் கலை சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது. சொந்தமாக ஒரு தொழில் முயற்சியைத் தொடங்கி அதில் வெற்றி பெற்றிருப்பதற்காகவே இந்த விருதுக்கு நான் தெரிவுசெய்யப் பட்டிருந்தேன். அதாவது ஒரு சுய முயற்சிக்கான விருதாகத்தான் இது எனக்கு வழங்கப்பட்டது.
(தமிழர் பொருண்மியம் வாரமலர்)