அரசாங்கத்துக்கு எதிராக நாளை(செப்ரெம்பர் 22) வெள்ளிக்கிழமை பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களும், ஏனைய சில தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன.
“சுகாதார சேவைகள் ஆபத்தில்” என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது என்று சுகாதார சேவைகள் ஒன்றியத்தின் உறுப்பினர் மருத்துவர் ஜெயந்த பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய விரோத தினமாக 22ஆம் திகதியை நாம் பிரகடனப்படுத்துவதுடன், அனைத்து மருத்துவமனைகளின் முன்பாகவும் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நாட்டு மக்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். சுகாதார நிலைமைகள் எவ்வாறு உள்ளன என நாட்டு மக்களுக்குத் தெரியும். அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக சுகாதார கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறினோம். ஆனால், மக்களின் சுகாதாரம் தொடர்பில் அரசாங்கத்துக்குத் துளியளவும் அக்கறையில்லை. அரசியல்வாதிகளுக்கு இந்த மருத்துவமனைக் கட்டமைப்பு அவசியமில்லாவிட்டாலும், நாட்டு மக்களுக்கும் இது அவசியமாகும்-என்றார்.
இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.டி.மெதிவத்த இது தொடர்பாகத் தெரிவித்துள்ளதாவது-
நாட்டு மக்கள், விவசாய, கல்விசார், சுகாதாரத்துறை மற்றும் நாட்டின் பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்களின் ஆதரவு இந்த போராட்டத்துக்கு வழங்க முன்வந்துள்ளன.
மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக அணி திரள வேண்டும்-என்றார்.