யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழலில் போதைப்பாவனை அதிகரித்துள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்தவாரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகக் சூழலில் போதைப்பொருள் பாவனையாளர்களும், விற்பனையாளர்களும் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.
கைது செய்யப்படுபவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் இருக்கின்றனர்.மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை இலகுவாக மேற்கொள்கின்றனர்.
இதைக் கட்டுப்படுத்தத் தவறினால் இளம் சமூகம் போதைக்கு அடிமையாக மாறுவதைத் தடுக்க முடியாது என்று அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் வடமராட்சியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு வீழ்ச்சியடைந்துள்ளமைக்கும் போதைப்பொருளின் தாக்கமே காரணம் என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலைகளில் ஆசிரியைகளே அதிகம் உள்ள நிலையில், பாடசாலைக்கு வராத மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைப்பதில் அவர்கள் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.