இந்திய இழுவைப் படகுகளின் பாவனையால் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ள இலங்கை இந்திய மீனவர் சங்க பிரதிநிதிகள் கச்சதீவில் சந்திப்பு ஒன்றினை நேற்றையதினம்(மார்ச்15) மேற்கொண்டனர்.
இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் செய்யும் மீனவ சங்க பிரதிநிதிகளும் நெடுந்தீவு கடற்தொழில் சமாச பிரதிநிதிகளும் அந்தோனியார் ஆலய திருவிழா நிறைவுபெற்றதும் ஆலய முன்றலில் சந்திப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது இலங்கை மீனவர்கள் தங்கள் ஏழு நாட்களும் கடலில் மீன் பிடிக்கவலைகளை பரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் காரைக்கால் மீனவர்கள் 7 நாட்களும் இலங்கை பகுதியில் அத்துமீறி நுழைந்து வலைகளை அறுத்துசெல்வதாக தெரிவித்ததுடன்
இராமேஸ்வரம் மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மீன்பிடிக்க வரும்போது மீதமுள்ள நான்கு நாட்கள் நாங்கள் எங்கள் கடலில் வலை பரப்பி மீன் பிடித்துவந்தோம். ஆனால் தற்போது ஏழு நாட்களும் வந்து எங்கள் கடலில் மீன்பிடிப்பதால் எங்கள் வலைகளும், வளங்களும் முழுமையாக சேதம்அடைகின்றதுடன் “காலையில் நாங்கள் கடலில் மீன்களை தேடவில்லைஎங்கள் வலைகளை தான் தேடுகிறோம்” என மீனவர்கள் தங்கள் வேதனையைவெளிப்படுத்தினர்.
இதேவேளை தமிழக 05 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும்இழுவைப்படகால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதாகவும் தமிழக மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் இதைக் கண்டித்து ஐந்து மாவட்ட நாட்டுப்படகுமீனவர்கள் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த கடந்த மார்ச் 1 இல் திட்டமிட்டிருந்தனர். அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டம்தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே உங்கள் கோரிக்கைகளையும் எங்கள் மீனவர்களிடம் எடுத்துக்கூறி இந்திய இலங்கை மீனவர்களின் பொது பிரச்சினையாக இதனை முன்னிறுத்தி, மத்திய மாநில அரசுகளிடம் முறையிடுவதாக தமிழக நாட்டுப்படகு மீனவர்கள்உறுதியளித்தனர்.
எல்லைதாண்டிய இழுவைப் படகுகளின் நடவடிக்கை தொடருமாயின் வடபகுதி மீனவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மீள எழும்ப முடியாத நிலையின் விழிம்பில் நிற்பவர்கள் தற்கொலை செய்ய வேண்டிய நிலை தோன்றும்.
பல வடிவங்களில் எமது போராட்டங்களை முன்னெடுத்த போதும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை , இனி எம்மிடம் போராட மீதம் இருப்பது உயிர் மட்டும்தான் அதை அழித்தே போராட வேண்டிய நிலை ஏற்படமுன்பு இதற்கு தீர்வு காணவேண்டும் என சமாச பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்