மத்திய கிழக்குப் போர்க்களத்தில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துபாய், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தசாப்தங்களில் காணப்படாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.
ஈரானியப் படைகள் டுபாய் கடற்கரைக்கு அருகாமையில் பயணித்த ஒரு சர்வதேசச் சரக்குக் கப்பலை இலக்கு வைத்துத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிரதான எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக அங்கு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, விமான நிலையச் செயற்பாடுகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

போரின் மற்றுமொரு முக்கிய நகர்வாக, ஈராக்கின் தென் பகுதியில் அமைந்துள்ள ‘பாஸ்ரா’ துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டுள்ள இத்துறைமுகம் தாக்கப்பட்டதையடுத்து, ஈராக் அரசாங்கம் தனது ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தையும் உடனடியாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தத் தொடர் தாக்குதல்களின் நேரடி விளைவாக, இன்று காலை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது இலங்கையைப் போன்ற இறக்குமதிப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்குப் பாரிய சவாலாக அமையவுள்ளது. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்சார உற்பத்தித் தடைகள் எமது நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது.