இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழ்நாடு பாம்பன் அடுத்த முந்தல்முனை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த 9.5 லீட்டர் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் பாம்பன் முந்தல் முனை குந்துகால், வேதாளை, மரக்காயர்பட்டினம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் நாட்டுப் படகுகளில் ஐஸ் போதைப் பொருள், கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (19/12) அதிகாலை பாம்பன் அடுத்த முந்தல்முனை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கஞ்சா எண்ணெய் கடத்த இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படையினர் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்தனர்.

அப்போது ஒரு நாட்டுப் படகில் மர்ம நபர்கள் நால்வர் கஞ்சா எண்ணெய் பொதிகளை ஏற்றுக் கொண்டிருந்ததை கண்ட இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை  மடக்கிப் பிடிக்க முயன்ற போது அவர்கள் நால்வரும் கடலில் குதித்து தப்பித்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டுப்படகையும் அதிலிருந்த 9.5 லீட்டர் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமிற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகில் இருந்து கடலில் குளித்து தப்பித்தவர்கள் தங்கச்சிமடம் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த நால்வர் என தெரியவந்துள்ளது.

தப்பியோடிய நால்வரையும் தீவிரமாக தேடி வருவதுடன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய் மதிப்பு ரூ. 12 கோடி இருக்கும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share this Article