ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளர்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை இன்று (பெப்ரவரி 8) ஆரம்பித்து கொள்கை பிரகடன உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தினால் 2026ஆம் ஆண்டில் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்ளையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தாம் விருப்பத்துடன் இந்த வரிகளை விதிக்கவில்லை எனவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விருப்பமின்றியேனும் சரியானதைச் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும் எனவும் வரி எல்லையை 2 இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
163 பில்லியன் ரூபா தொகையை இழக்கும் நிலையில் தற்போது நாடு இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பல்வேறு நாடுகள் இவ்வாறு வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை குறைவடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் பணவீக்கம் உயர்வடைந்து, பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஐந்து, ஆறு மாத குறுகிய காலத்திற்கு இந்தக் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியுமாயின், தீர்வை நோக்கி செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காணிப் பிரச்சிணைக்கு உரிய தீர்வு காணப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேசிய காணி சபை ஒன்றை ஸ்தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்படுவதோடு, தேசிய காணிக்கொள்கை வரைவு தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை துரிதப்படுத்த உள்ளது என்றும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்காக பாடுபடும் பெருந்தோட்ட மக்களை இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துள்ளேன் என்றும், அது தொடர்பாக தாம் முழு அவதானம் செலுத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கொள்ளை பிரகடன உரையின் போது தெரிவித்தார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது. நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.
ஜனாதிபதியின் கொள்ளை பிரகடன உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் நாளை (பெப்ரவரி 9) காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.