யாழ்ப்பாணத்தில் இருந்து 46 கிலோ மீற்றர் தூரத்தில் வடக்கு தெற்காக 6 முஅ அகலமும் கிழக்கு மேற்காக 8 KM நீளமும் கொண்டு தனியொரு தீவாக அமைந்துள்ளது நெடுந்தீவு. இது 1963 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து 7 மைல் தூரத்தில் உள்ளது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு தனியொரு தீவாக அமையும் இம் மண், பயணிகள் போக்குவரத்து, பொருட்களை ஏற்றி இறக்குதல் என்பவற்றிக்கு கடல் போக்குவரத்தே ஆதார சுருதியாக இருந்து வருகின்றது. நெடுந்தீவின் கடல்போக்குவரத்தில் வத்தைகள்,கட்டுமரங்கள்,தனியார் வள்ளங்கள், அரச படகுகள் என்பன தொடர்ச்சியான சேவைகளை வழங்கியுள்ளன. 1933 இல் கொண்டுவரப்பட்ட ‘மேதர்’ இயந்திரப் படகு தொடக்கம் இறுதியாக வந்த நெடுந்தாரகை வரை பல படகுகள் வேவையில் ஈடுபட்டுள்ள போதும் தற்போது வரை ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் என்ற வீதத்தில் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும்‘குமுதினி’ படகின் வகிபங்கை வரையறுப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
(1)
நெடுந்தீவின் கடற்போக்குவரத்தில் காலனித்துவ காலத்தில் இருந்தே வத்தைகள் பயன்பாட்டில் இருந்ததாக அறியப்படுகின்றது.து. J.P.Lewis –(The Journal of the Ceylon Branch Asiatic Society of Grete Britain &Ireland) என்ற பத்திரிகையாளர் 1909 ஆம் ஆண்டு எழுதிய குறிப்பின் படி நெடுந்தீவில் 1905இல் எட்டு தொன் பொருட்களை ஏற்றக்கூடிய நான்கு வத்தைகள்,மற்றும் இருபது கட்டுமரங்கள், இங்கு இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். அவற்றில் நெடுந்தீவில் இருந்து போத்தல் அல்லது பானைகளில் அடைக்கப்பட்ட நெய், பாய்கள், கொப்பரை, பினாட்டு, ஊமல், தேங்காய்கள், பருத்தி நூல், கனவாய் ஓடு, கால்நடைகள், மாட்டெரு, கிடுகு, பூவரசம் தடிகள், என்பன இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது.
1905 இல் ஏறக்குறைய 50 கொப்புரா விளக்குகள், 20,000 தேங்காய்கள், 10,000 கிடுகுகள், அத்துடன் ஆறு வத்தை கொப்புரா, நான்கு வத்தை பூவரசம் தடிகள், மற்றும் மாட்டெரு என்பன நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவருடைய பதிவிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. 1920ஐ அண்மித்த காலங்களில் நெடுந்தீவில் இருந்து கட்டு மரத்தில் தபால் பொதிகள் கொண்டு செல்லப்பட்டதுடன், தற்போது 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.பி.பாபிலு என்பவரும் அவருடைய சகோதரர்களும் அச்சேவையில் ஈடுபட்டு, திரு.பி.பாபிலு ஓய்வு பெறும் காலத்தில் 87.00 ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டதாகவும் அறியப்படுகின்றது. தற்போது அவருடைய மூன்றாவது, மற்றும் நான்காவது தலைமுறையினர் நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்றனர். (ஓய்வூதியம் என்பது காலனித்துவ உரிமையாகும். அது 1900 க்கு முன்னர் சட்டமாக்கப்பட்டது. விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய உரிமை 1898 இல் சட்டமாக்கப்பட்டுள்ளதுடன் 1934 இல் ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் கீழ் சட்டமாக்கப்பட்டுள்ளது.)
பிற்பட்ட காலங்களில், திரு. குமரேசன் விதானையார் (மாலை கட்டி விதானை), திரு.சு.நாகேந்திரர் விதானையார் (கொடிவேலியார்), திரு.முருகேசு திரு.வேலானந்தம், திரு. சந்தியோகு (நெருப்பெட்டி) திரு.சேமன் கணபதி போன்றோரிடம் வத்தைகள் இருந்தன. இவற்றினுடாக இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கும், இராமேஸ்வரத்திற்கும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தேவையான பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
(2)
இதுதவிர,நெடுந்தீவின் போக்குவரத்தில் தனியார் தமக்குச் சொந்தமான வள்ளங்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். 1933 ஆம் ஆண்டில் இருந்து மேதர் இயந்திரப் படகு நெடுந்தீவுக்கும் ஊர்காவற்றுறைக்குமான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தது. 1934 ஆம் ஆண்டு தீவகப்போக்குவரத்துச் சங்கம் நாகபூசணி 1 என்ற படகினைக் கொள்வனவு செய்து போக்குவரத்தில் ஈடுபடுத்தியது. அதில் நெடுந்தீவைச் சேர்ந்த ஜோசப் எட்வேட் சாரதியாகக் கடமையாற்றினார். பின் ஜோசப் எட்வேட்டும் அவரது சகோதரங்களும் ஜோய்வுல்;றோசரி (Joyful Rosary) என்ற இயந்திரப் படகினைக் கொள்வனவு செய்து சேவையில் ஈடுபடுத்தினர். அதே போன்று நெடுந்தீவைச் சேர்ந்த பத்துப் பேர் இணைந்து ஒரு படகினைக் கொள்வனவு செய்து சேவையில் ஈடுபடுத்தினர். இது ‘பத்துப்பேர் போட்டு’ என அழைக்கப்பட்டது. இக்காலங்களில் சீகுயின் (Sea Queen) என்ற படகும், கதிரைவேல் கொம்பனியால் M.M.L என்ற படகும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன் இதுவரை பல தனியார் படகுகள் சேவையில் ஈடுபட்டு விலகியுள்ளன.
1) குமரபுரவி 1, 2 – திரு.சு.குமாரசாமி
2) அக்குவாட்டி – திரு. ஆ.கந்தையா
3) பத்தாயிரம் வோட் – திரு.அருளப்பு மரியநாயகம்
4) சாந்தா – திரு. திரு.முருகேசு
5) ஆவே மரியா – அருட்தந்தை அமல்ராஐ;
6) பென்ஸ்சி லோஞ் – பே.அல்பிரைட் (சின்னமனி) கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்தப் படகு சேவையில் இருந்து விலகிய பின், அதன் சுக்கான் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
1964 இல் நெடுந்தீவு ‘பொதுச்சேவைக் கூட்டுறவுச் சங்கம்’ சமுத்திர தாரகை என்ற படகுச் சேவையை நடத்தியது. 1979ஆம் ஆண்டு பொதுச் சேவைக் கூட்டுறவுச் ;சங்கம், ‘நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கம்’ என பெயர் மாற்றப்பட்டதன் பின் சமுத்திர தேவி, உதய தாரகை 1, சமுத்திர தேவா, உதய தாரகை 2, போன்ற படகுச் சேவைகளை நடத்தி, தற்போது ‘சமுத்திர தேவா’ என்ற படகு சேவையில் உள்ளது. இவை தவிர நெடுந்தீவில் பின்வரும் தனியார் படகுகள் தற்போது தேவைக்கேற்ப சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
காளியம்பாள் – திரு. த.நகுலேஸ்வரன்
அலையரசி – நெடுந்தீவு கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் சங்கம் (சமாசம்)
ஹாரிஹணன் – (இரண்டு படகுகள்) திரு. அ.கேதிஸ்வரன்
(3)
1937 ஆம் ஆண்டு அரசாங்கம் பொது வேலைப் பகுதியினரின் பராமரிப்பின் கீழ் சில்வர் ஸ்பிறே (Silver Spray) என்ற 40 பேர் பயணம் இயங்திரப் படகு ஒன்றை நெடுந்தீவு ஊர்காவற்றுறை கடற்பாதையில் சேவையில் ஈடுபடுத்தியது. அதன் இறுதிக் காலத்தில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த திரு.இலாசர் என்பவர் நடத்துநராக கடமையாற்றினார். ஆங்கிலேயரால் பணிக்கு அமர்த்தப்பட்ட இப்படகு Bathymetric Survey என்ற நீரியல் ஆய்வின் அடிப்படையில் இரண்டு அலைகளின் இடைத்தூரத்தைக் கணித்து கட்டப்பட்டதாகும்.1950 களின் முற் பகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரசைச் சேர்ந்த தீவுப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அல்பிரைட் தம்பியையாவின் முயற்சியினால் அவருடைய மனைவியின் பெயரில் ‘இராஜேஸ்வரி’ என்ற இயங்திரப் படகு நெடுந்தீவு ஊர்காவற்றுறை கடற்பாதையில் ஈடுபடுத்தப்பட்டது.
அதன் பின், வீ.கே.கந்தையா, வி.என்.நவரத்தினசிங்கம், கா.பொ.இரத்தினம் போன்ற தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியினால் அலையரசி, குமுதினி, வடதாரகை, வலம்புரி, மணிமேகலை போன்ற படகுகள் சேவையில் ஈடுபட்டன. இதில் மணிமேகலை, வலம்புரி ஆகிய இரண்டு படகுகளும் இரும்பு வார்ப்பினால் செய்யப்பட்டதாகும்.1964 இல் எலாரா என்ற படகும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இது வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனிநபரின் படகாகும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இப்படகு, கடத்தலில் பிடிபட்ட பின் நெடுந்தீவின் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
2011 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையின் கீழ் ‘கமநெகும’ திட்டத்தின் அடிப்படையில் அப்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருந்த டக்லஸ் தேவானந்த அவர்களின் முயற்சியினால் வடதாரகை 2 என்ற கப்பல் நெடுந்தீவு போக்குவரத்திற்காக கொண்டு வரப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது திருத்த வேலைக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆறு மாதமாக அங்கு தரித்து நிற்கின்றது.
வடக்கின் வசந்தம் நெல்சிப் திட்டத்தில் நெடுந்தீவு மக்களின் அபிப்பிராயம் கேட்டபோது மக்களின் முதல் விருப்பமாக நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்குமான படகுச் சேவைக்கான தீர்மானம் முன் மொழியப்பட்டது. இதன் அடிப்படையில் நெல்சிப் திட்டதினூடாக உலக வங்கி, அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பவற்றின் நிதியுதவியுடன் 150 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையின் அனுசரனையுடன் கட்டப்பட்ட நெடுந்தாரகை 2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் தனது பயணத்தை ஆரம்பித்தது. நெடுந்தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கருத்தில் கொண்டு அப்படகு வழங்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
(4)
குமுதினிஏன் பிந்திவந்தாள்?
கடலம்மா…நீயேசொல்
குமுதினிஏன் பிந்திவந்தாள்?
எம்மவரின் அவலங்களைச்
சடலங்களாச் சுமந்துகொண்டு
‘குமுதினி’குருதிவடியவந்தாள்.
கடலம்மாகண்டாயோ?
கார்த்திகேசுஎன்னவானான்?
எந்தக் கரையில்
உடலூதிக் கிடந்தானோ?
ஓ…சோழகக் காற்றே
நீ
வளம்மாறி வீசியிருந்தால்…
குமுதினிவரமாட்டாள் என்று
நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்
பாவம்
மரணங்களின் செய்தி கூடக்
கிட்டாததொலைதீவில்,
ஏக்கங்களையும் துக்கங்களையும்
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்
காத்திருக்கும் மக்கள்…
கடலம்மாநீமலடி
ஏனந்தத் தீவுகளை
அனாதரவாய் தனியேவிட்டாய்?
கடலம்மா…
உன் நீள் பரப்பில்
அனாதவராய் மரணித்தஎம்மவரை
புதியகல்லறைகளைஎழுப்பி
‘அனாதைக் கல்லறைகள்’எனநினைவூட்டு
இனிவரும் கல்லறைகள்
வெறும்
இழப்புக்களின் நினைவல்ல
எமது
இலட்சியங்களின்
நினைவாகட்டும்.
-நிலாந்தன்-
1985.05.15 அன்று நடுக்கடலில் வன் செயலுக்கு உள்ளாகி,தீவக மக்களின் மனங்களில் அழியாத நினைவை ஏற்படுத்தி, ஒரு நினைவுச் சின்னமாக அலைந்து திரியும் குமுதினி, திருகோணமலை ‘டொக்யாட்டில்’ கட்டப்பட்டு ஜேர்மனியின் ‘புக்’ இயந்திரம் பொருத்தப்பட்டு,தேக்குமரக் கட்டு மானத்துடன், பிரயாணிகளின் கடற் கலங்களுக்குரிய வெள்ளை நிறத் தீந்தைப் பூச்சுடன் உருவாக்கப்பட்டது. சிறிது காலம் திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு,பின் கொழும்பு துறைமுகத்தில் பாரிய கப்பல்களைத் தள்ளிக் கொடுக்கும் ‘அலியா’படகாக கடமையாற்றி 1976ஆம் ஆண்டு பொதுவேலை திணைக்களத்தின் கீழ் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு, நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டபோது, இத்திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது வரை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கடமையில் ஈடுபட்டு வருகின்றது.
1976 ஆம் ஆண்டு முதல் 1986 வரை பின்வருவோர் குமுதினியின் ஓட்டுநர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.
1) திரு.ஐ.கந்தையா (ஊர்காவற்றுறை)
2) திரு.வடிவேலு (ஊர்காவற்றுறை)
3) திரு.வாசர் (ஊர்காவற்றுறை)
4) திரு.அ.அந்தோனிப்பிள்ளை (நெடுந்தீவு)
5) திரு.ஞா.தேவசகாயம் (நெடுந்தீவு)
6) திரு.ஆ.கந்தையா (நெடுந்தீவு)
1986 தொடக்கம் இன்று வரை குமுதினி ஓட்டுநராக கடமை புரிந்து ஓய்வு பெற்றவர்கள், மற்றும் தற்போது ஓட்டுநர்களாக கடமை புரிவோர்.
1) திரு.வி.கந்தசாமி (1986 – 1990)
2) திரு.நா.தவமணி (1990 – 2007)
3) திரு.ம.ஜெயசீலன் (2007 – 2014)
4) திரு.சி.செபநேசன் (2014 முதல் 31.05.2017)
5) திரு.யா.ஜெயசீலன், திரு.சி.செபநேசன் (01.06.2017 முதல் 31.08.2019)
6) சி.ஜெபநேசன் (01.09.2019 முதல் இன்றுவரை – இவருடன் தற்போது திரு.ம.யூட்குமார், திரு.ப.நியூறின், திரு.அ.அன்பழகன் ஆகியோரும்கடமையாற்றி வருகின்றனர்.
குமுதினிப் படகின் ஆரம்ப பயணக் கட்டணமாக 50 சதம் அறவிடப்பட்டது. பின் 2006 ஆம் ஆண்டு முதல் மஹிந்த சிந்தனையின் கீழ் திருகோணமலை மூதூர் படகுச் சேவையும் நெடுந்தீவு குமுதினி படகுச் சேவையும் கட்டணமற்ற சேவையாக மாற்றியமைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜேர்மனியின் புக் இயந்திரத்திற்கு பதிலாக புதிய லேடன் இயந்திரமும் (இந்தியா) குமுதினி படகின் மேல் கூடாரமும் மாற்றியமைக்கப்பட்டன.
(5)
தற்போது நெடுந்தீவு மாவிலித் துறைமுகம் ‘வள்ளக் காடாய்’ காட்சியளிக்கின்ற போதும் குமுதினிப் படகே ஒரு நாளைக்கு மூன்று தடவை என்ற வகையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. வடதாரகை திருத்த வேலைக்குச் சென்று விட, நெடுந்தாரகை வருமானம் போதாமையால் கிழமைக்கு ஒரு தடவை மாத்திரம் சேவையில் ஈடுபட, இதனால் அனைத்து சுமைகளையும் சேர்த்து சுமக்கின்ற பாலைவன ஒட்டகமாக, குமுதினி மாற்றப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மூன்று தடவை சேவையில் ஈடுபடுதல் என்பது குமுதினியாளை மட்டுமல்ல, அதில் பணியாற்றும் ஊழியர்களையும் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கும் செயலாகும். தற்போது கொவிட் 19இன் காரணமாக நெடுந்தீவு மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்தியுள்ள நிலையில்,‘நெடுந்தீவை தலை கீழாக மாற்றிக் காட்டுவோம்’ என கங்கணம் கட்டிக் கொண்டு வெளியிடங்களில் இருந்து இங்கு ‘கடமைக்காக’ நாளாந்தம் வந்து செல்லும் அதிகாரிகளுக்காகவும், உத்தியோகத்தர்களுக்காகவும் மேலதிகமாக ஒரு சேவையை வழங்க வேண்டிய நிலை குமுதினிக்கு ஏற்பட்டுள்ளது.
குமுதினி தமது சேவையில் நாற்பத்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக இந்த மண்ணுக்காக, மக்களுக்காக உழைத்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தூர நோக்கில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் பழுவைக் குறைக்கும் மாற்று வழிகளைக் கண்டறிய உரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும். குமுதினி என்பது வெறுமனே ஒரு கடற் கலமல்ல்அது எமது மக்களின் உணர்வு; எமது சுவாசம்; ஒரு நினைவுச் சின்னம்; ஒட்டு மொத்தத்தில் அவள் எமது அனைவருக்கும் தாய்!
‘கடலில் நாம் படும் அல்லலை, கரையில் நிற்கும் மனிதர் அறிவாரோ!’
உசாத்துணை
தீவகம் வளமும் வாழ்வும், (1994),கலாநிதி கா.குணபாலன், தீவக கோட்ட கூட்டுறவு ஒண்றியம்,
09.02.2011 அன்று இறக்குமதிகள், ஏற்றுமதிகள், ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆற்றிய உரை.
நன்றி:
செ.இராதாகிருஸ்ணன் – நிறைவேற்றுப் பொறியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ்ப்பாணம்.
நன்றி:
திரு.த.நகுலேஸ்வரன் – நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு.
(மற்றும் போதிய தகவல்களைத் தந்துதவிய அனைவருக்கும் நன்றிகள் உரித்து.)
(இக்கட்டுரையில் ஏதேனும் தவறுகள், போதாமைகள் இருப்பின் அவை சுட்டிக் காட்டப்படின் உரிய பகுப்பாய்வின் பின் திருத்தம் செய்து திருந்திய பதிப்பாக பதிவேற்றம் செய்யப்படும்.)