சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.
இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனிதஇடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திரபுத்திரனார் கதை படித்து எல்லோருக்கும்கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.
தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்கு சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம்பண்ணுவர். பின்பு வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர்குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம்(முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அனுஷ்டிக்கக் கூடாது என்பர்.
பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்
சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தர் அவதரித்த நாளாக கருதப்படுவதால், இதுஅவருக்குரிய வழிபாட்டு நாளாகவும் கருதப்படுகிறது. சித்ரகுப்தரை வழிபடுவதால்மனதிலும், எண்ணங்களிலும் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். இதனால் நாம் தவறுகள் செய்வது குறைந்து, நல்ல சிந்தனைகள் அதிகரிக்கும். பல விதமான நன்மைகள் பெருகிக் கொண்டே செல்லும் என்பதால் சித்ராபௌர்ணமி வழிபாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.