உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய தாக்குதல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கும் வேளையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா இன்று(24/12) அதிகாலை ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சைட்டோமிர் பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவனும் பலியானார்.

குறித்த தாக்குதல்களில் கீவ் பகுதியில் 76 வயது பெண்மணியும், மேற்கு உக்ரைனின் க்மெல்னிட்ஸ்கி பகுதியில் 72 வயது முதியவரும் உயிரிழந்தனர்.

ரஷ்யா மொத்தம் 635 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 621 தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எரிசக்தி உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை -7°C ஆகக் குறையும் என்பதால் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே அமெரிக்காவில் மியாமியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதேவேளை, உக்ரைன் ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. மொஸ்கோவில் நேற்று ரஷ்ய ஜெனரல் ஒருவர் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கலாம் எனப் பலர் சந்தேகிக்கின்றனர்.

Share this Article