அரியாலை, பூம்புகார் அரசினர் பாடசாலை கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டுள்ள நிலையில், மாணவருக்கான கல்வி நடவடிக்கைகள் அரியாலை சிறிபாரதி பாடசாலையில் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் உள்ள சிலரால் ஆசிரியர்கள், அதிபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்தே பாடசாலை உரிய இடத்தில் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
பூம்புகார் அரசினர் பாடசாலையில் கற்கும் தரம் 4 மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் தொலைபேசி அழைப்பெடுத்து பாலியல் ரீதியாக உரையாடினார் என்று தெரிவித்தே அந்தப் பகுதியில் உள்ள சிலர் பாடசாலைக்குள் புகுந்து அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில் தொலைபேசி அழைப்பு வந்த இலக்கம் ஆசிரியரது இல்லை என்பதும், உரையாடியது ஆசிரியர் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பாதுகாப்புக் கருதி அயல் பாடசாலையில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடம்பெறுகின்றன. அடுத்தவாரம் பாடசாலை வழமைபோன்று நடைபெறும் என்று யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய தொலைபேசி இலக்கம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும், இது தொடர்பில் சைபர் பிரிவுப் பொலிஸார் தொலைபேசி இலக்கத்துக்கு உரியவரை இனங்காண நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.