பேருந்துகளில் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் பாடசாலை மாணவர்கள் தொடர்பாக இ.போ.ச தரப்பிடம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் மற்றும் கிழவன்குளம் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை ஏ9 வீதியில் பயணிக்கும் இ.போ.ச விற்கு சொந்தமான பேருந்துகள் ஏற்றிச்செல்லாமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி பத்திரிகையில் பிரசுரமான செய்தியின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் தொடச்சியாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையின் நேற்று (மே 3) இ.போ.ச, வடபிராந்தியத்தின் பதில் பிராந்திய முகாமையாளர் /செயலாறறல் முகாமையாளர் ஏ.ஜே. லெம்பேட்டுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச வட பிராந்திய செயலாற்றல் முகாமையாளரால் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
1. 2023.05.02 ஆம் திகதி தமது தலைமையிலான குழுவினர் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அதன் பிராகாரம் இ.போ.ச வட பிராந்தியத்தின் கீழ் இயங்கும் சாலைக்குட்பட்ட பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை தமது குழுவினரால் கண்டறியப்பட்டு அந்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் வெளி மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த பேருந்தும் இவ்வாறு பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை கண்டறியப்பட்டு அவர்கள் தொடர்பில் இ.போ. சபையின் தலைவருக்கு அறிக்கையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
2. மேலும் குறித்த வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மாணவர்களை ஏற்றி இறக்குதல் தொடர்பில் காரைநகர் சாலை ஊழியர்களுக்கு தமது பயிற்சி பாடசாலையினால் பயிற்சிகள்
வழங்க்பட்டுள்ளதாகவும் செயலாற்றல் முகாமையாளரால் விளக்கமளிக்கப்பட்டது.
3.மேலும் பரந்தனிலிருந்து மாங்குளம் வரை பாடசாலை சேவையை ஆரம்பிப்பதற்கு இ.போ.சபையின் கிளிநொச்சி சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாவும் இருப்பினும் நடத்துநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி பற்றாக்குறை நிலவுவதனால் எதிர்காலத்தில் சாரதிகள் நியமிக்கப்பட்டவுடன் பாடசாலை சேவை ஒன்று பரந்தன் மாங்குளம் இடையில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளிக்கபட்டது – என்றுள்ளது.