யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(மார்ச் 20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் , சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன.
தற்போது IPL இல் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடன் குமார் சங்கக்கார கதைத்து இருந்தார். எனது கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல கவனிக்கிறேன் என்றார். அது தொடர்பில் சிலருடன் கதைத்து எனக்கான வாய்ப்புக்களை பெற்று தந்துள்ளார். அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை நான் முடிந்தளவு பயன்படுத்தி என்னை வளர்த்துக்கொள்வேன் என்றார்.
அதேவேளை ஜூன் மாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் அக்கடமி ஆரம்பிக்கப்பட்டு, கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக JS கிரிக்கெட் அக்கடமியின் இயக்குனர்களில் ஒருவரான வைத்தியர் க.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை உயர்த்த உதவி செய்கிறோம். தரமான வீரர்களை உருவாக்கி, சர்வதேச தரத்தில் வீரர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன், யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக அக்கடமி உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அதனூடாக வீரர்களுக்கு உயர் தர பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் கொழும்புக்கு வீரர்களை அழைத்து சென்று, புற்தரைகளில் விளையாட வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
தேசிய சர்வதேச வீரர்களுடன் விளையாடும் அவர்களின் அனுபவங்களை பெற்று கொள்ளும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி கொடுப்போம்- என்றார்