ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்றுமுன்தினம் (மே 12) ஆரம்பித்து வைக்கப்பட்ட Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 750 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கண்காட்சி இன்று (மே 14 )வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகிறது.
Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியின் ஊடாக நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதோடு, துறைசார் திறன் விருத்தியின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வலுவானதொரு பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப விவசாய வேலைத்திட்டத்திற்கான இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதோடு, தொழில்நுட்ப விவசாயக் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலான் ட்ரோன் பாவனையை ஊக்குவிக்கும் விதமாக ட்ரோன் தொழில்நுட்பவியலாளர்கள் மூவருக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.
Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி கண்காட்சியை பார்வையிட வந்தவர்களோடும் கலந்துரையாடினார். இதன்போது யாழ் மாவட்ட பாடசாலை மாணவ மாணவியரோடும் அவர் கலந்துரையாடினார்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல், கமல் குணரத்ன மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.