வேலணை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள், சபையின் முறையான அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவே சபைத் தவிசாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, எந்தவிதமான சட்ட அனுமதியும் பெறாமல் பலர் தன்னிச்சையாக குழாய்க் கிணறுகளை அமைப்பதைக் கவனிக்க முடிந்துள்ளதாகவும், இந்நடவடிக்கைகள் குறைந்த அளவில் உள்ள நன்னீர் ஆதாரங்களைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
எனவே, குழாய்க் கிணறு அமைக்க விரும்பும் நபர்கள், முதலில் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அந்த சிபாரிசின் அடிப்படையில் பிரதேச சபையினிடமிருந்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், குழாய்க் கிணறு அமைக்கும் சேவை நிறுவனங்கள் அல்லது நபர்கள் தங்களது சேவை தொடர்பான விபரங்களைப் பிரதேச சபையில் பதிவு செய்து உரிமப்பத்திரம் பெற்றிருக்க வேண்டும். அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைப்பது மற்றும் அத்தகைய சேவையை வழங்குவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அனுமதியின்றி இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை கொண்டு வந்து பணிபுரியும் சேவை வழங்குநர்களுக்கு எதிராக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.