விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த 81 வயதுடைய ராமன் தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்த விபத்து நேற்றுமுன்தினம் (ஜனவரி 10) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணியளவில் நடந்துள்ளது. தனது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சைக்கிளில் இவர் சென்றபோது, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்துள்ளது.
திருநெல்வேலியில் உள்ள மக்கள் வங்கிக்குச் செல்வதற்காக வீதியின் இடது புறத்தில் இருந்து வீதியின் நடுக்கோட்டை கடந்து மறுபுறத்துக்குச் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மயக்கமடைந்த இவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றையதினம் மாலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.