வடமராட்சி கிழக்கில் உள்ள கட்டைக்காட்டு பகுதியில், நூற்றுக்கணக்கான பனைமரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, நேற்று மாலை (ஒகஸ்ட் 07) கட்டைக்காடு ராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள பனைகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அதனை கண்ட இராணுவத்தினர் உடனடியாக தீயணைப்பு வாகனங்களை அழைத்ததுடன், மருதங்கேணி ராணுவ முகாமில் இருந்து கூடுதலாக 200 இராணுவத்தினரை அழைத்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், தீ வேகமாக பரவியதால் ஏனைய பனைமரங்களும் தீக்கிரையாகியுள்ளன.
இத்தகைய தீ வைப்பு சம்பவம் இதுவரை பலமுறை இடம்பெற்றுள்ளதாகவும், இதுவே முதல்முறை அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இடம் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியாகும். பொதுமக்கள் அங்குள்ள பனைமரங்களில் இருந்து மட்டைகளை வெட்டுதல், பனைப்பழங்களை சேகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் வழக்கம்தான். இராணுவத்தினர் இதனை தடுக்கவில்லை என்றாலும், சிலர் எதிர்மறையான செயற்பாடுகளில் ஈடுபடுவதை அங்கு உள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அண்மையில் அருகிலுள்ள மதுபான சாலையில் மது அருந்திய சிலர் காட்டுப் பகுதியில் சென்று, அந்த பனைகளுக்கு தீவைத்து இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.
தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களை கைது செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.