போர் இடம்பெற்ற காலத்தில் காங்கேசந்துறை துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தி கடல் மார்க்கமாக வடக்குக்கு எண்ணெய் விநியோகிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து யாழ்ப்பாணம் வரை விரைவில் தொடங்கவுள்ள படகுச் சேவைக்கும் டீசல் வழங்கி டொலரில் வருமானத்தை பெறுவது தொடர்பாக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக எரிபொருளைக் கொண்டு செல்வதற்கும், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு காங்கேசன்துறை எண்ணெய் தாங்கிகளில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து 33 ஆயிரம் (33,000) லீற்றர் பவுசரை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிடும் போது, திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக எரிபொருளை வழங்குவதன் மூலம் போக்குவரத்து செலவை பெருமளவு குறைக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார்.
காங்கேசந்துறை துறைமுகத்தில் 800 மெட்ரிக் டன் டீசலை, 400 மெட்ரிக் டன் பெட்றோலையும் சேமித்து வைக்க முடியும் என்பதோடு, ஒரு கடற்படைக் கப்பலில் ஒரே நேரத்தில் 100 மெட்ரிக் டன் எரிபொருளை கொண்டு செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.