நாட்டில் மஞ்சள், உழுந்து தட்டுப்பாடு தொடரும் நிலையில் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படும் வரையில் இரு பொருட்களிற்கும் உடன் இறக்குமதியினை அனுமதிக்குமாறு பிரதமரிடம் யாழ். வணிகர் கழகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்திற்கு முன்பு மார்ச் மாதம் வரை மஞ்சள் 400 ரூபாவாகவும், உழுந்து 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போதுஅதன் விலைகள் மிக அதிகரித்து மஞ்சள் 1 KG 3000 ரூபாவாகவும், உழுந்து 1 KG 600 ரூபாவாகவும் விற்கப்படுகிறது. அத்துடன் மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.
நாட்டில் தற்போது மஞ்சள் போதியளவு உற்பத்தி செய்யப்படவில்லை. மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் வரை மஞ்சளை தடை செய்யாது இறக்குமதிக்கு அனுமதிக்கும்படி தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக பொது மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள மஞ்சளை அதிகளவில் பாவனை செய்கின்றார்கள்.
ஆகவே இவ்விடயத்தினையும் கருத்தில் எடுத்து மஞ்சளுக்கான இறக்குமதித் தடையை நீக்கி தாராளமாக மஞ்சள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போது நாட்டில் உழுந்து உற்பத்தி போதியளவில் இல்லை. அத்துடன் தமிழ் மக்களுடைய பாரம்பரிய உணவு வகைகளான வடை, தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு இது அத்தியாவசியமானதாகும்.
அத்துடன், சாதாரண ஏழை மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகையால் அதன் இறக்குமதி தடையை நீக்கி பொது மக்களுக்கு இவை குறைந்த விலைக்கு கிடைக்கக் கூடியதான ஏற்பாடுகளை செய்து தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.