நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(ஜூலை 09) மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இம்முறை மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்ற செயற்பாடுகளை உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள முடியாதென்பதால் அவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய இதுதான் நடைமுறை எனில் அதனைப் பின்பற்றுவதற்குத் தயாரென ஆலய நிர்வாகத்தினர் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
ஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.