யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கல்லூரிக் கீதத்தை அனைவருக்கும் விளங்கும் வகையில் மாற்ற வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், அந்தக் கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் சீருடை வழங்கும் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்ட கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், யாழ். மத்திய கல்லூரியின் கல்லூரின் கீதத்தை வெளிநாட்டவர்கள் தமக்கேற்ற வகையில் இயற்றியுள்ளனர். இந்தநிலையில் அதையே நாம் இன்றுவரை பாடிக் கொண்டு வருகின்றோம்.
ஒரு பாடசாலைக் கீதத்தைப் பாடினால் அதன் அர்த்தம் மற்றவர்களுக்கும் விளங்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
தற்போதும் வெளிநாட்டவர்கள் இயற்றிய மத்திய கல்லூரிக் கீதத்தை நாம் பாட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் கல்லூரிக் கீதத்தை மாற்ற வேண்டும் என்று நான் குறிப்பிட்டால் சிலர் அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக் கூடும்.
நான் எனது மனதில் பட்டத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றேன்.
ஆகவே கல்லூரிக்கு தற்போது புதிய அதிபர் வந்திருக்கின்றார். அவர் பழைய மாணவர்களுடன் இது குறித்து கலந்துரையாட வேண்டும். எனது கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன் – என்றார்.