கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்தப்பட்ட 17 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் நேற்று (ஜூலை 23) ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றுக்குச் சென்று திரும்பியபோது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை, முதலியார் கோவிலடியைச் சேர்ந்த சர்மிகா என்ற இந்தச் சிறுமி நான்கு மாதங்களுக்கு முன்னர் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார். இவர் இந்த வீட்டில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார் என்று கூறப்படுகின்றது.
சிறுமி வேலைக்கமர்த்தப்பட்டபோது மாதந்தாம் 25 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டபோதும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாவே சம்பளமாக வழங்கப்பட்டது என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் மாதந்தம் ஒரு தடவை மட்டுமே சிறுமி பெற்றோருடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்கப்பட்டார் என்றும், சிறுமி வீட்டுக்குச் செல்ல பல தடவைகள் முயற்சித்தபோதும், பெற்றோரின் வற்புறுத்தலால் தொடர்ந்தும் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
சிறுமியின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.