அகில இலங்கை சைவ மகாசபை, பண்டைய சைவ மரபுச் சபைகளின் அடிச்சுவட்டில் உருவாகி பத்து வருடங்களை நிறைவு செய்துள்ள தருணத்தில்,யாழ்.பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையு டன் இணைந்து திருமந்திர மாநாட்டை எதிர்வரும் ஐப்பசி மாதம் திருமூலரின் குருபூசை தினத்தன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளது.
அறநெறி மற்றும் பாடசாலை சைவசமய பாடஆசிரியர்களை வலுவூட்டுவதை இலக்காகக் கொண்டு, குறிப்பாக இளையோருக்குத் திருமந்திரம் காட்டும் உன்னத சைவ இறையியல், மானிடவியல், மருத்துவம், அறநெறி ஒழுக்க சமத்துவ சிந்தனைகளை எடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
திருமந்திர மாநாட்டை முன்னிட்டு, அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே திரு மந்திரப் பேச்சு, மற்றும் பா ஓதுதல் போட்டிகளை அகில இலங்கை ரீதியில் இணைய வழியில் நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சைவசமயத்தின் உயர்கல்விப் பீடமான யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கைகள் பீட சைவசித்தாந்தத்துறையின் மேலான வழிகாட்டலுடன் இணைந்த ரீதியில் மேற்படி மாநாட்டை நடாத்தவுள்ளதாகவும்,சைவத்தமிழ் அன்பர்கள் அனைவரது ஆதரவையும் நாடி நிற்பதாகவும், அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்தார்.