யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களால் ஒவ்வொரு மாதமும் கிரமமாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன பரிசோதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடாக இயங்கும் உணவகங்கள், பலசரக்கு கடைகளிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த 21 ஆம் திகதி யாழ்நகர், அரியாலை பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் குறித்த பகுதிகளில் இயங்கும் உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது அரியாலை பகுதியில் திகதி காலாவதியான பெருமளவான பொருட்கள் வைத்திருந்த பலசரக்கு கடை உரிமையாளர் சிக்கினார். அத்துடன் சுகாதார சீர்கேடாக முறையில் இயங்கிய உணவகங்கள் யாழ்நகர் பகுதியில் ஒன்றும், அரியாலை பகுதியில் ஒன்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கின. அதன் உரிமையாளர்கள் மூவரிற்கும் எதிராக நேற்றுமுன்தினம் (மார்ச் 22) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அன்றைய தினமே நீதிமன்றால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பலசரக்கு கடை உரிமையாளரிற்கு 60,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன் உணவக உரிமையாளர்களிற்கு 80,000 ரூபா, 30,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன் உணவகத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களிற்கு சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றால் பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை இடப்பட்டது.
இதனையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நேற்றுமுன்தினம் இரண்டு உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன.