யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டணமானி (மீற்றர்) பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகள் மட்டுமே சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (மே 3) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது யாழ். மாவட்டச் செயலர் ஆ.சிவபாலசுந்தரன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் அதிகளவில் அறவிடப்படுகின்றன என்று தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதிநிதி, வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் முச்சக்கர வண்டிச் சேவை தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்புவது, அநாவசியமான கண்ணாடிகளைப் பொருத்துவது, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் சீரற்ற வகையில் பொருத்துவது போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.
பயணிகள் மற்றும் வீதியில் பயணிப்பவர்களை அச்சமூட்டும் வகையில் அதிக ஒலிகளை எழுப்பும் கருவிகளை முச்சக்கர வண்டிகளில் பொருத்துவதைத் தடை செய்தல் என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், முச்சக்கரவண்டிச் சாரதிகள் மரியாதைக்குரிய ஆடைகளை அணிவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் யாழ். மாநகரப் பகுதியில் சேவையில் ஈடுபடுவது பெரும் தொல்லையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டு முதலாம் இலக்க மோட்டார் வாகனச் சட்ட ஒழுங்குவிதி அதாவது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கு அமைய நாடு முழுவதிலும் முச்சக்கர வண்டிகளுக்கு உரிய கட்டண மீற்றர் பொருத்தப்பட்டு கட்டணம் அறவிப்பட வேண்டும்.
இது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறையில் இல்லை. மாவட்டத்தில் கட்டணங்கள் அதிகமாக உள்ளன என்று பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனால் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானிகளைப் பொருத்தும் நிறுவனத்தினரை அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடியபோது, ஒரு நாளைக்கு குறைந்தது 40 முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்த முடியும் என்று குறிப்பிட்டனர்.
போக்குவரத்து அதிகாரசபையின் கணக்கெடுப்பின்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் சேவையில் உள்ளன. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் 2 ஆயிரத்து 25 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் கட்டணமானி பொருத்த வேண்டும். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டணமானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது.
அத்தோடு தரிப்பிடங்களில் தரித்து நிற்பதற்கான அனுமதியும் இரத்துச் செய்யப்பட்டு, மீண்டும் பதிவுகளை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்குரிய ஒழுங்குகளை யாழ். மாநகரசபையும் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று முச்சக்கர வண்டிச் சங்கமும் தெரிவித்துள்ளது என்று யாழ். மாவட்டச் செயலர் தெரிவித்தார்.