போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பவர்களுக்கு உடனடியாக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தரப்படும் என்று சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணதைச் சேர்ந்த ஒருவர் 50 ஆயிரம் ரூபா வழங்கி சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ளார். அந்த சாரதிப் பத்திரம் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டதை அடுத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாகனம் ஒன்றில் சென்று கைவிரல் அடையாளம் என்பவற்றைப் பெற்றுக்கொண்டு, போலியாக சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வாகனத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேககநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.