கட்சியை இரண்டாம் பட்சமாக்கி நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம். நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. போராட்டக்காரர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எமது ஆதரவாளர்களை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கினால் வட்டியுடன் நட்டஈடு செலுத்த அவர்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பாாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொருளாதாரப் பாதிப்பை ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள். எரிபொருள், எரிவாயு ஆகிய அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு, பொருளாதாரப் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் எமது அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மக்களின் ஜனநாயக போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிச கட்சி பயங்கரவாத போராட்டமாக மாற்றியமைத்தது. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் போராட்டத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற எடுத்த முயற்சியை நாடாளுமன்றத்தின் ஊடாக நாங்கள் தோற்கடித்து ஜனநாயகம், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை உறுதிப்படுத்தினோம்.
போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி திட்டமிட்ட வகையில் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் மற்றும் எமது ஆதரவாளர்களின் வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.
ஒரு காலத்தில் நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்தேன். போராட்டத்தால் மஹிந்த ராஜபக்சவின் பலமான அமைச்சரவை பதவி விலகியது. அதைத் தொடர்ந்து கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.
ஆட்சியாளர்கள் இல்லாமல் நாடு இருந்த போது எவரும் நாட்டுக்காகவேனும் அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை. கட்சியை இரண்டாம் பட்சமாக்கி, நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். 69 இலட்ச மக்களின் எதிர்பார்த்தை முழுமைப்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம்.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. கட்டம் கட்டமாக நாடு வழமைக்கு திரும்புகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்-என்றார்.