கொழும்பு, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள 6 மாடிகளை கொண்ட புடவையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள 6 மாடிகளை கொண்ட புடவையகத்தில் இன்று காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில், தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் காயங்கள் காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களில் 11 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
காலை நேரத்தில் தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டை பற்றவைக்கும் நோக்கில் புடவையகத்தைச் சேர்ந்த முகாமையாளர் பெற்றோலை ஊற்றியமையே தீப்பரவலுக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையம் பெரும்பாலும் சாரி வகைகளை கொண்டதாகவும், திருமண ஆடைகளை கொண்டதாகவும் இருந்தது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.