மாகாண சபை தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தம் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு நேற்று ( 09 ஜூலை) அறிவித்தார்.
மாகாண சபைகளுக்கான மூன்று வருட திட்டத்தையும் ஜனாதிபதி முன்வைத்தார்.
மாவட்ட விகிதாசார முறையில் தேர்தல் நடத்தல் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 % அல்லது அதனை விடவும் அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி, மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மாகாண சபை செயற்படுத்தப்படும் வரை முன்னெடுக்க எதிர்பார்க்கும் புதிய திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.
மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையொன்றை நியமிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக மாகாண மேற்பார்வைக் குழுத் தலைவர் அல்லது பிரதானிகள், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் மாகாணத்தில் உள்ள அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாகாண சபை முறையை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நிறுவனமாக மேம்படுத்துவதற்கு சில யோசனைகளையும் ஜனாதிபதி முன்வைத்தார்.
1. பிரதேச செயலாளர்கள் நியமனம்
2. கல்வி தொடர்பான சேவைகளை நடைமுறைப்படுத்த தேவையான அதிகாரத்தை மாகாண சபைக்கு வழங்குதல்
3. தொழில், தொழில்நுட்ப பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்காக மாகாண மட்டத்தில் சபைகளை நிறுவுதல்
4. பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமளித்தல்
5. விவசாயப் புத்தாக்கம், கீழ் மட்டத்திலான அனைத்து விவசாய சேவைகளையும் வழங்க மாகாண சபைகளுக்கு அதிகாரமளித்தல்
6. மாகாண சுற்றுலா மேம்பாட்டு சபைகளை நிறுவுதல்
7. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கைத்தொழில்கள் தொடர்பான வரையறையை 4 மில்லியன் ரூபாவில் இருந்து 250 மில்லியனாக உயர்த்த கைத்தொழில்கள் சட்டத்தில் திருத்தங்களைச் சேர்த்தல்.
8. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட சில பணிகள் இன்னமும் மத்திய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதால் அந்த தவறை திருத்துதல்
9. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிறுவுதல்
என்பனவே அந்த யோசனைகள் ஆகும்.
இதேவேளை, இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள எதிர்பார்க்கும் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.
2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி மூலம் பிராந்தியத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைப் பயன்படுத்துவதே வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களின் முதன்மை நோக்கங்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முதலீடுகளை ஈர்ப்பது, கொழும்பு, பூநகரி, திருகோணமலை துறைமுகங்களை பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி மையங்களாக மாற்றுவது அவற்றின் நோக்கமாக காணப்படுகிறது.
இந்த துறையில் கூட்டு முயற்சிகளை எளிதாக்க இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு சூரிய மற்றும் காற்றாலை சக்திக்கான முதலீடுகளையும் ஏற்றுமதிக்கு சாதகமான சூழலையும் உருவாக்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அதானி குழுமம் முன்வந்துள்ளது.
இதேவேளை, நிலையான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறினார்.
தேசிய நல்லிணக்கத்திற்கு அவசியமான விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான யோசனைகள் குறித்து கலந்துரையாடி இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்பிக்கவுள்ளதாகவும் உரிய நடவடிக்கைகளின் பின்னர் சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்திற்கு பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், சட்டமூல வரைவு அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா என்பதை அறிய சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
‘யுத்தத்தில் காணாமல் போன வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 203 பேருக்கு ஜூலை 2023 ஆம் ஆண்டு வரை 40.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த செயல்முறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். OMP அலுவலகத்திற்கு கிடைத்த 21,374 முறைப்பாடுகளில், 3,462 மீதான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது முழுமையாகச் செயற்பட ஆரம்பித்த பின்னர் அந்த பணிகளை துரிதப்படுத்த முடியும். காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைக் கோருபவர்கள் இடைக்காலச் செயலகத்தில் விரிவான தகவல்களைச் சமர்ப்பிப்பது சிறந்தது,’ என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
முப்படைகளால் விடுவிக்கப்படவுள்ள காணிகள்…
(i) இராணுவம் மற்றும் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தில் 1.4 ஏக்கர், கிளிநொச்சியில் 13 ஏக்கர் மற்றும் முல்லைத்தீவில் 20 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவுள்ளன.
(ii) யாழ்ப்பாணத்தில் 3 – 6 மாதங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் இராணுவத்தினால் அடையாளங் காணப்பட்டுள்ளன.
(iii) பலாலி இராணுவ முகாமில் இருந்து சுமார் 290 ஏக்கர் காணி விவசாயம் மற்றும் பருவகால பயிர்செய்கைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளன.
(iv) இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பேரில் வட மாகாணத்தில் தற்போதும் விடுவிக்க முடியாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.