யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்த வீட்டை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் மாணவன் பாவித்த கையடக்கத் தொலைபேசியின் உரையாடல் பதிவுகளையும் ஆராயுமாறு யாழ்ப்பான நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவனின் வழக்கு இன்று வியாழக்கிழமை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது நீதிவான் மேற்படி கட்டளையை பிறப்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக உறவினர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த மாணவரின் சகோதரன் நீதி கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றையும் அண்மையில் அனுப்பியிருந்தார். இவ்வாறான நிலையில் யாழ் நீதிமன்றில் இன்று நடைபெற்ற குறித்த வழக்கில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது தொடர்பான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவன் வசித்த வீட்டை சுற்றியுள்ள இடங்களில் சிசிடிவி கேமரா இருந்தால் அதன் ஒளிப்பதிவை எடுக்குமாறும் அதே நேரம் குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி பதிவுகளையும் ஆராய்ந்து எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.