நெடுந்தீவுப் பகுதியில் நீண்ட காலமாக அமைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ள பொது விளையாட்டு மைதானம் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக தயாராகுமா என ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ் மைதானமானது ஊரில் உள்ள விளையாட்டு வீரர்களது திறமையினை வெளிப்படுத்து முகமாக பொது விளையாட்டு மைதானமாக அமையும் வகையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதுடன், விளையாட்டு நடவடிக்கைக்கு ஏற்றவகையிலும் வேலைகள் முடிவுறுத்தப்படாமையாலும் நீண்ட காலமாக எந்த விதமான விளையாட்டுகளும் இதில் இடம் பெறாமல்மேச்சல் தரையாக காணப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தவிடயம்.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான இளைஞர் விளையாட்டு விழாவுக்கான போட்டிகளில் சிலவற்றினை இம்மைதானத்தில் நடாத்துவதற்காக கழக உறுப்பினர்கள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் இணைந்து மைதானத்தை துப்புரவு செய்து எல்லே போட்டியினையும் நடாத்தி முடித்துள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இருப்பினும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது மழைநீர் தேங்கி நிற்காத வகையில் மண் கொண்டு பல அடுக்குகளாக நிரப்புவதற்கு செலவழிக்கப்பட்டது. இவ்வாறு செலவழிக்கப்பட்டு நிரப்பப்பட்டமண் ஆனது ஊரியுடன் சேர்ந்த மக்கிமண்ணாக இருந்தமையால் கடந்தகாலங்களில் பெய்த பருவமழை காரணமாக மேற்பகுதி மண் அரிக்கப்பட்டு அதில் உள்ள ஊரிகள் வெளிக்கிளம்பி உள்ள காரணத்தினால் விளையாட்டுவீரர்கள் அம்மைதானத்தில் விளையாடுவது பெரும் சிரமத்துக்கு உரிய ஒன்றாககாணப்படுகின்றது.
இதே வேளை நெடுந்தீவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் 11 பேர்கொண்ட கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற அளவில் இல்லாதிருப்பதுடன் இப்பொது மைதானம் இதற்கேற்ற வகையில் உள்ளதுடன், 400 மீட்டர் ஓடுபாதை கொண்ட தடகள மைதானத்தை அமைப்பதற்கு ஏற்ற அளவிலான சாதமான அமைப்பு கொண்டதாக அமைந்திருப்பது சிறப்பானதொன்றாகும்.
எனவே இதற்கான திருத்த பணிகளை மேற்கொண்டு அதன் மூலம் நெடுந்தீவில் உள்ள இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறன் முன்னேற்றத்தையும், உற்சாகத்தையும் ஊட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாயத்தைகட்டி எழுப்பக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ் விளையாட்டு மைதானத்தை சுற்றி சுற்றுமதில் அமைக்க வேண்டிய தேவை இருப்பதுடன் அதனை சூழ உள்ள பகுதிகளில் நிழல் தரும் மரங்களையும் நடுவதன் மூலம் எதிர்காலத்தில் இதனை சிறந்த ஒரு மைதானமாகவும் மாற்றமுடியும் என்பது விளையாட்டு ஆர்வலர்கள் பலரின் அவாவாகும்.
எனவே நெடுந்தீவின் மீது அக்கறை கொண்ட நலன் விரும்பிகள் , புலம் பெயர் அமைப்புக்கள் மற்றும் அரச அதிகாரிகள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பாக கவனம் எடுத்து ஏற்கெனவே இடம்பெற்ற மைதான வேலைகள் தொடர்பிலும் ஆராய்ந்து விரைவாக இம் மைதானத்தை நிரந்தரமாக இளைஞர்கள், யுவதிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அதனை செயல்படுத்துவதன் மூலம் நெடுந்தீவின் விளையாட்டுத் துறையையும் , இளைஞர்கள், யுவதிகளின் விளையாட்டு மூலமான பண்பாடுகளையும், ஒற்றுமையினையும் வளர்த்தெடுக்க முடியும் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
எனவே இது தொடர்பில் கூடிய அக்கறை எடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பது பலரது அவாககாணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.