நெடுந்தீவில் உள்ள குதிரைகளுக்கான நீர்த்தொட்டியில் நீர் நிரப்பப்படாமையால் அண்மைக்காலமாக நீரற்று வறண்டு காணப்பட்டதால் அங்கிருக்கும் குதிரைகள் தாகத்தில் கவனிப்பாரற்று அலைந்து திரிந்தன.
தற்போதய வெப்பம் காரணமாக தாகத்தில் தவித்த இந்த உயிர்கள் பற்றி உரிய முகநூலூடாக அதிகாரிகளின் கவனத்திற்கு நல்லுள்ளங்களால் கொண்டுவரப்பட்டதையடுத்து இரவோடிரவாக விரைந்து இந்த தொட்டிகளில் நீர் நிரப்ப யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்பின் பேரில் நெடுந்தீவு பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது.
விலைமதிக்க முடியாத இந்த உயிரினம் வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இவை சுற்றுலாப் பயணிகளை கவரும் உயிரினமாக மாறியுள்ளது.
இன்று வரை நமது தட்ப வெப்பத்திற்கேற்ப பரிணமித்து வாழ்ந்து வருகின்றன. இவ்வளவு காலமும் அங்குள்ள பூவரசங்காடுகளிலும், நீர் தேக்கங்களிலும் தாமாக உயிர்வாழ்ந்த இந்த குதிரைகள் தற்போதைய வரட்சி காரணமாக இனியும் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படுமானால் அதற்கு முழுக்காரணமும் மனிதர்களேயாகும்.
எனவே இவ் வரட்சிக்கால நீர்விநியோகத்தை நெடுந்தீவு பிரதேச செயலகத்தினர் இடைவிடாது கிரமமாக இந்த நடவடிக்கை தொடரவேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.