நெடுந்தீவுப் பிரதேசத்துக்கான உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து விபத்துக்குள்ளாகி முன்பக்க வாசல் பகுதி பாவிக்க முடியாத அளவு சேதமடைந்துள்ளது.
பிரதான வீதி மிக மோசமான நிலையில் உள்ளமையால் பேரூந்துக்கு இயந்திர கோளாறும் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக பயணிகள் சேவையில் ஈடுபடாமல் பேரூந்து நெடுந்தீவு மாவிலி துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து பழுதடைந்த நாள் தொடக்கம் நெடுந்தீவு பகுதி மக்கள் குறிப்பாக மேற்கு பகுதி மக்கள் உள்ளூர் பயண சேவைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
தீவில் இருந்து வெளிச்செல்வோர், உள் வருவோர் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்காகவும், வைத்தியசாலை தேவைகளை நிறைவு செய்வதற்காகவும், அரச அலுவலகங்களில் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும்,பாடசாலை மாணவர்கள் கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பெரும் பணச் செலவுடன் வாடகை வாகனங்களை அமர்த்தி சென்று வருகின்றனர்.
பயணிகள் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தும் வகையிலான தனியார் பேரூந்துகள் தற்போது ஊரில் உள்ளபோதும் அவற்றினை, நடைமுறையில் இருந்த பேருந்து சேவை அட்டவணைக்கமைய ஒழுங்குபடுத்தி சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் மக்களின் அசௌகரியங்கள் குறைக்கப்படும். இதனை முன்னெடுக்க எவரும் முன்வராததையிட்டு மக்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
படகு சேவை இடம்பெறும் நேரங்களில் மட்டுமாவது தனியார் வாகனங்களை ஒழுங்கு செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் மக்கள் மனதில் நீண்டுசெல்கின்றது.
இந்த நிலையில் பழுதாகிய பேரூந்துக்கு பதிலாக புதிய பேரூந்து கொண்டு வரப்படவுள்ளதனை செய்திகள் மூலம் அறிந்து தாம் மகிழ்ச்சியடைகின்றபோதும் அது வரும் வரை தமது துயர் நீங்காத என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நெடுந்தீவுப் பகுதியில் எவ்வளவோ இடங்கள் உள்ளபோதும் பழுதடைந்த பேரூந்தினை மாவிலித்துறைமுகப் பகுதியில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைத்துள்ளமை மேலும் தம்மை வேதனையடைய வைப்பதாக மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.