நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உதைபந்தாட்ட லீக் சுற்றுத் தொடரில் போல் நியுட்டனின் தலைமையிலான ஈகிள் ஐட் அணி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஏப்ரல் 16) மாலை 4 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் போல் நியுட்டன் தலைமையிலான ஈகில் ஐட் அணியும் அரவிந்த் தலைமையிலான பிளைக் ரைகர்ஸ் அணியும் மோதின. இறுதிப் போட்டியில் ஈகிள் ஐட் அணி சம்பியனானது.
முதலிடத்தைப் பெற்ற அணிக்கு 2 லட்சம் ரூபாவும், 2ஆம் இடத்தைப் பெற்ற அணிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவும், 3ஆம் இடத்தைப் பெற்ற அணிக்கு 70 ஆயிரம் ரூபாவும், 4ஆம் இடத்தைப் பெற்ற அணிக்கு 15 ஆயிரம் ரூபாவும் பணப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
தொடரின் சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த கோல்கீப்பர், சிறந்த பின்கள வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும், பணப்பரிசும் மற்றும் நடைபெற்ற 15 சுற்றுப் போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீர்ர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.