நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக நெடுந்தீவுக்கான விஜயத்தை இன்று (மார்ச் 05) மேற்கொண்டிருந்த வடமாகாண ஆளுநர் திருத்தம் செய்யப்பட வேண்டிய பிரதான வீதியினை பார்வையிட்டார்.
மாவிலித்துறை – பெரியதுறை வீதியில் ஒரு பகுதி திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதி மிகமோசமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை அதிகாரிகளுடன் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலும், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வீதி அபிவிருத்தித் திட்டத்திலும், சுற்றுலா அதிகார சபையின் நிதி உதவியின் கீழும் அந்த வீதி முழுமையாக திருத்தப்படவுள்ளதாக உரிய திணைக்கள அதிகாரி ஆளுநரிடம்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள வீதியோரப் பற்றைகளை அகற்ற உடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர்பணிப்புரை விடுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் நெடுந்தீவு வெல்லை வீதி மற்றும் கிழக்கு பிரதானவீதி என்பனவும் மக்கள் நலனுடன் சுற்றுலாவிகளின் பயணத்திற்காகவும் அவசியமாக திருத்தம் செய்யவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.