நெடுந்தீவு மேற்கு பகுதியில் பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள விவசாய உள்ளீடுகள் விற்பனை நிலையம் எந்தவிதமான செயற்பாடுகளும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின், புங்குடுதீவு கமநல சேவைகள் நிலையத்தின் கீழ் அரச நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட விவசாய உள்ளீடுகள் விற்பனை நிலையம் எந்தவிதமான பராமரிப்பும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பல இலட்சம் பெறுமதியான பசளையாக்கல் இயந்திரம் அதன் உதிரிப்பாகங்களுடன் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. கட்டிடத்தின் கூரை, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்த நிலையிலுள்ளதுடன் நிலையத்தின் உட்பகுதியில் இறந்த கால்நடைகளின் பாகங்களும் , பறவைகளின் எச்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
பெருமளவு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட இந்நிலையம் இயங்காமலேயே கைவிடப்பட்டுள்ளது. நெடுந்தீவில் உள்ள விவசாய அமைப்புகள் இதனை கண்டும் காணாமல் விட்டுள்ளதுடன், இதன் அருகில் கிராம அலுவலகம் உள்ளபோதும் , கவனிப்பாரற்று உள்ள ஒரு அரச சொத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக கவனம் எடுத்து இந்நிலையத்தினை இயங்குநிலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இச் செய்தி தொடரும்.