வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நாளை (நவம்பர் 14) நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான நூலக அறிமுகம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் நூல் இரவல் வழங்கும் பிரிவான இரகுபதி நினைவு நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதி மற்றும் மாணவர் பகுதி நூல்களை காட்சிப்படுத்தல், மாணவர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கதை கூறல் , மற்றும் மாணவர்களை நூலக வாசிப்பு வட்டத்தின் அங்கத்தவராக்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்தவகையில் காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய மாணவர்களுக்கும் , காலை 11.00 மணிக்கு நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்களுக்குமாக இவ் ஆரம்ப நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கியுள்ளதுடன் தொடர்ந்து இச் செயற்பாட்டினை முன்னெடுக்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.