இலங்கையில் ஒவ்வொரு 4 மணித்தியாலத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் 40 வீதமானோர் கல்வி கற்றவர்கள் எனவும் அவர்களுள் 22 பேர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எனவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் நாட்டில் பல்வேறுபட்ட காரணங்களினால் தற்கொலையில் ஈடுபடுவோர் தொடர்பான செய்திகள் சமீபத்திய நாட்களில் அதிகளவில் பதிவாகியுள்ளன.
அத்துடன் தனிநபர்கள் தற்கொலை செய்து கொள்வதுடன் சில சந்தர்ப்பங்களில் குடும்பமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் போது தற்கொலை செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருகின்றமை வெளிக்கொணரபட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் தற்கொலை செய்துக்கொள்ளும் தரப்பினரின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 10 வீதத்தால் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் வருடமொன்றுக்கு 3000 இற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
மேலும் தற்கொலை செய்து கொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள் கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன் உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.
இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழில் புரிவோர்களில் விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினர் இந்த தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையை பொருத்தமட்டில் 4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.