தை மாதத்தின் பிறப்பை வரவேற்கும் முகமாகவும், விவசாயத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய சூரியன், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் தை முதல்நாளில் தைப்பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
குடும்பத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இப்பண்டிகை, தமிழர்களின் முக்கியமான திருநாள்களில் ஒன்றாக திகழ்கிறது.
தமிழர்களின் பெருவிழாவான தைப்பொங்கல் இன்று (ஜனவரி 14) செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இது ஓர் அறுவடைப் பண்டிகை எனக் கருதப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு ஆகிய நாடுகளில் தமிழர்கள் வாழும் இடங்களில் இதனை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
உலகம் உணவை நம்பி இயங்குகிறது, உணவின் அடிப்படை விவசாயமே. விவசாயத்திற்கு விவசாயியும் சூரியனும் மிக முக்கியமானவர்கள். இத்தகைய சூரியனை நன்றி கூறி வழிபடுவது இந்த இயற்கைத் திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.
“உழவு இல்லையேல் உலகில்லை” என வள்ளுவர் குறிப்பிடுவது போல, விவசாயத்தின் முக்கியத்துவத்தை முன்னோர்கள் அழகாக வலியுறுத்தியுள்ளனர். இயற்கையை தெய்வமாகப் போற்றும் பாரம்பரியம் இன்று 2025 ஆம் ஆண்டின் தைப்பொங்கல் வரையிலும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள சூரியன், மழைக்கு அதிபதியான இந்திரதேவன் மற்றும் விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மரபு இதனுடன் இணைந்துள்ளது.
பொங்கல் பண்டிகை, தைத் திருநாள் கொண்டாடும் ஆன்மீக முக்கியத்துவத்தை உள்ளடக்கி, இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பெருவிழாவாகும்.
பொங்கல் பண்டிகை, உழைக்கும் மக்களின் நன்றி செலுத்தும் நிகழ்வாகவும், சூரியனையும் மற்ற உயிரினங்களையும் தெய்வமாகக் கருதி கொண்டாடப்படும் திருவிழாவாகவும் விளங்குகிறது. இந்த பண்டிகை சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய திருநாளாகும்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி நமது வாழ்வியலின் அடையாளமாக இன்று வரை பேசப்படுகிறது. கிராமங்களில் இன்றளவும் தைக்கு சிறப்பு வழங்கப்படுவதைக் காணலாம். “எதுவாக இருந்தாலும் தை பிறக்கட்டும்” என மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுவார்கள்.
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் அறுவடை பருவம் தை மாதமே ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியைக் கொண்டு சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப் பானையில் கொதிக்கவைத்து, சூரியனுக்கும் மாட்டுகளுக்கும் படைத்து கொண்டாடும் திருவிழாவே தைப்பொங்கலாகும்.
delftmedia சார்பாக எமது உறவுகளுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.