தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை.தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது. நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
அந்த நிலையிலேயே நிதியமைச்சின் செயலாளர் போதியளவு நிதியை வழங்க முடியாது என தெரிவித்திருந்தார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று(ஒக்ரோபர் 18) பிரதமர் தினேஷ் குணவர்த்தன தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் அது தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சில பகுதிகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமல் போவதால் ஏற்படும் நிலைமை தொடர்பிலும் அனைவரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
அதனைக் கருத்தில் கொண்டு அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அந்த நிலையிலேயே நிதியமைச்சின் செயலாளர் போதியளவு நிதியை வழங்க முடியாது என தெரிவித்திருந்தார்.
தனிப்பட்ட ரீதியில் தேர்தலுக்கு செலவிடுவதற்கு நிதி கிடைக்கலாம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் அதற்கான நிதியை விடுவிக்க முடியாத நிலையிலேயே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொண்டு கலப்புத் தேர்தல் முறைமை ஒன்றைக் கொண்டு வருவோம் என நாட்டுக்கு தெரிவித்தே மக்கள் ஆணையை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.
அது தொடர்பில் எமது அரச தலைவர்கள் இந்த பாராளுமன்றத்தில் பல தடவைகள் தெரிவித்துள்ளார்கள். நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் போதும் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்றத்தில் இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டதாக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை செயற்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை கலப்பு முறையில் நடத்துவது தொடர்பான யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் அந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.
அதற்கிணங்க அமைச்சரவையானது பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களினதும் கருத்துக்களை பெற்றுக் கொண்டு மீண்டும் அறிவிக்குமாறு தெரிவித்திருந்தது.அனைத்து மக்களினதும் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு பாராளுமன்றத்திலும் மூன்று விசேட தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதன் மூலம் பாராளுமன்றத்திற்கு விடயங்கள் கோரப்பட்டுள்ளன.
மாகாண சபை தொடர்பான தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுத்தபோது அதில் பெருமளவு திருத்தங்களை உள்ளீடு செய்து நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் கொண்டு வருவது தொடர்பில் தெரிவுக்குழு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் நாம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணை மற்றும் அதனை செயற்படுத்த முடியுமா இல்லையா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஜனநாயக ரீதியில் கருத்துக்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் பாராளுமன்ற கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது.
அதற்காக அரசியல் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பங்குபற்றுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேகத்துடன் பார்த்து அரசியல் தீர்மானம் மேற்கொள்ள முடியாது என்பதை நான் எதிர்க்கட்சித் தலைவருக்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இதற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தம் மற்றும் 21ஆவது திருத்தம் ஆகியவற்றிலும் இந்த திருத்தங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன. சந்தேகமின்றி நாம் உண்மைத் தன்மையுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்- என்றார்.