கடுகதி ரயில் சேவைகள் நாளை மறுதினம்(ஒக்ரோபர் 21) தொடக்கம் மாங்குளம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.முல்லைத்தீவு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றியது ரயில்வேத் திணைக்களம் .
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ரயில் சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் முறிகண்டி மற்றும் மாங்குளம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் காணப்படுகின்றன.
இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுக்கான ரயில் சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய பிரதான ரயில் நிலையமாக மாங்குளம் காணப்படுகின்றது. மாங்குளம் ஊடாகவே அதிக முல்லைத்தீவு மக்கள் தமக்கான சேவையை பெறக்கூடியதாக இருக்கிறது.
இருப்பினும் மாங்குளம் ரயில் நிலையத்தில் ஆசன முற்பதிவு வசதிகள் இல்லாமையால் கடுகதி ரயில் நிறுத்தாது சென்றுவந்தது. இதனால் பொது மக்கள் மாத்திரமன்றி அரச அதிகாரிகளும் சேவையை பெற கிளிநொச்சி அல்லது வவுனியா ரயில் நிலையங்களுக்கே செல்லவேண்டிய நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் இந்த இரண்டு சேவைகளையும் வழங்குமாறு பவ்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பலதடவைகள் அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு மாவட்ட செயலகத்தால் கொழும்பு ரயில் நிலைய தலைமை அலுவலகத்துக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் இது தொடர்பான – கோரிக்கைகள் அனுப்பபட்டிருந்தன.
மாங்குளம் ரயில்வே நிலைய அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது முயற்சியால் நாளை மறுதினம் தொடக்கம் மாங்குளம் ரயில் நிலையத்தில் கடுகதி ரயில்கள் உட்பட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என்று ரயில்வேத் திணைக்களம் அறி வித்துள்ளது.
இதற்கமைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 05.10 அணிக்குக் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் 10.42 மணிக்கு மாங்குளத்தை வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.
யாழ். நிலா வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மாங்குளத்துக்கு அதிகாலை 4.20 க்கு வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.காங்கேசன்துறையில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 1.15 மணிக்குப் புறப்படும் குளிரூட்டிய கடுகதி ரயில் மாங்குளத்துக்குப் பிற்பகல் 2.54 மணிக்கு வந்தடைந்தது கொழும்பை நோக்கி செல்லும்.
யாழ். நிலா ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு மாங்குளத்துக்கு இரவு 11.20 மணிக்கு வந்தடைந்து கொழும்பு நோக்கி செல்லும். இதனைவிட ஏற்கனவே நிறுத்தப்பட்டுவந்த அனைத்து ரயிலும் வழமை போல் நிறுத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
விரைவில் ஆசன ஒதுக்கீட்டு வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .