நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு திருத்த வேலைகள் முடிவடைந்து கடலில் இறக்கும் பணிகள் நேற்று (ஜூன் 20) முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறை ரேவடி படகு திருத்தும் துறையில் திருத்த வேலைகளுக்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த குமுதினி படகானது வேலைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் நேற்று (ஜூன் 20) சம்பிரதாயபூர்வமாக பொங்கல் வைத்து அதற்கான வழிபாடுகள் இடம் பெற்று அதன் பின்னர் கடலில் இறக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 21) மாலை குமுதினியாள் வல்வெட்டித்துறை கடலை தொட்டுள்ளது. படகு முழுமையாக கடலில் இறக்கப்பட்ட பின்னரே கடல் வழியாக குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் பயணிகள் சேவை ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக இதுவரைக்கும் எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை.
நெடுந்தீவு மக்களோடு உறவாகி அவர்கள் மனங்களில் நிறைந்து அவலங்களை தாங்கிய குமுதினி படகு மீண்டும் சேவையில் ஈடுபடும் தினத்தை நெடுந்தீவு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.