சமூகப் பாதுகாப்பு தொடர்பான மீளாய்வுக்கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள சமூகப்பாதுகாப்பு, போதைப்பொருள் பாவனை, வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கடத்தல் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதுடன் 02.03.2023 ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு முன்னாயத்த கூட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர்களாலும் அப் பிரிவுகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட்டமை தொடர்பாக ஆராயும் முன்னேற்ற கூட்டமாகவும் இது அமைந்துள்ளது.
அத்துடன் இக்கூட்டத்தில் பிரதேச செயலகங்களில் இடம்பெறும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை பயன்பாட்டால் வடமாராட்சி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து , கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடற்படை அரண் ஊடாகவே கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதிவிநிலை உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், விஷேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி, பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், யாழ் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.