ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் டினூக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்த விஜயத்தில் அடங்குவர்.
சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி, உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்தை சந்திக்கவுள்ளார்.
மே 24 முதல் 27 வரை திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, நிதி ,அமைச்சர் ஷுனிச்சி சுசூகி மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஆகியோருடன் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் டோக்கியோவில் நடைபெறும் நிக்கேய் மன்றத்தின் 28ஆவது ஆசிய எதிர்கால மாநாட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.
இந்த சர்வதேச மாநாடு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தலைவர்களை கூட்டுகிறது.
ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு பேரவை , ஜப்பான்-இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.