இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
நாளைமறுதினம் (ஜூலை 18) நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, குருந்தூர்மலை விவகாரம் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம் என்று தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எவ்விடயங்களை வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதுடன், இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ளன.
அதன்படி, ஜனாதிபதியிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்த வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனித்தனியாக இந்தியத் தூதுவரிடம் கடிதங்களைக் கையளித்துள்ளன.
மேலும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் கையெழுத்திடாத இலங்கைத் தமிழரசுக் கட்சி, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு முன்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பு நாளைமறுதினம் பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது என்றும், இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதியே அழைப்பு விடுத்துள்ளார் என்றும் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
இதன்போது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவிருப்பதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி., குருந்தூர்மலை விவகாரம் உள்ளடங்கலாக அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடவிருப்பதாகத் கூறினார்.