முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது கணவர் விஜய குமாரதுங்க அரசியல் காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டதைப் போல, தன்னை கொல்லவும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதிய கடிதத்தில், தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் எண்ணிக்கையை குறைப்பது குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதியன்று அனுப்பிய கடிதத்தில், அவரது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் தனக்கு அதிக அச்சுறுத்தல் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் பலருக்கும் 243, 200 மற்றும் 109 பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பாதுகாப்பு வழங்கப்படுவது ஏன் என்பது புரியவில்லை என்றும், இது தமக்கு புதிராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிக அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் என்றும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாமே என்றும், அந்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.