ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(ஜூலை 4) அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, இன்று காலை 10.30க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு நடவடிக்கையாக தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்படுவது இது மூன்றாவது தடவை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், சமூக ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் என பல அடக்குமுறை சட்டமூலங்களை அரசாங்கம் முன்வைக்கும் சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த அழைப்பு, கருத்துகளை வெளியிடும் அடிப்படை உரிமைக்கு எதிரான செயல் என தாம் நம்புவதாக ஊடகவியலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.